உறவின் சுவடுகள்

Original Author: 
பி எஸ் நாராயணா
Publisher: 
மஞ்சரி
Story: 

அலுவலகத்திற்குள் நுழைந்தேனோ இல்லையோ, மேலதிகாரி என்னை அழைத்தார். "சந்திசேகர்! இதற்குள் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு முறை ஃபோன் வந்துவிட்டது" என்றார்.

வியப்பபாக இருந்து எனக்கு. வீட்டை விட்டு ஒன்பதரைக்குத்தான் கிளம்பி யிருந்தேன். இப்போது பத்தடிக்க பத்து நிமிடம். இந்த நாற்பது நிமிடங்களுக்கு கமலா இவ்வளவு அவசரமாக ஃபோன் செய்யும் அளவுக்கு என்ன தேவை வந்து விட்டது?

அதிகாரியின் மேஜை மீது இருந்த ஃபோனிலிருந்தே வீட்டு நம்பருக்கு டயல் செய்தேன். அதற்காகவே காத்திருப்பதுபோல் கமலாதான் போனை எடுத்தாள்.

"கமலா! என்ன விஷயம்? போன் செய்தாயாமே?"

"நீங்கள் உடனே வீட்டுக்கு வரவேண்டும்." பதற்றமாகச் சொன்னாள்.

"என்ன விஷயம்? எல்லோரும் நலம்தானே?"

"எல்லோரும் நலம்தான். சாந்தாவின் மகன் வந்திருக்கிறான்."

யார் இந்த சாந்தா?

"யாரோ சாந்தாவின் மகன் வந்தால் நான் அலுவலை விட்டுவிட்டு வீட்டுக்கு எதற்காக வரவேண்டும்?"

"அவளை நீங்கள் மறக்க விரும்பாமல்தானே முன் அறையில் சுவரில் ஃபோட்டோவை மாட்டியிருக்கீங்க."

"கமலா!"

"இருபது வருஷங்களுக்கு முன் உங்களை விட்டுவிட்டுப் போன உங்கள் மனைவி சாந்தா..." நீட்டி முழக்கினாள் கமலா.

சற்று நேரம் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன பேசுவதென்று புரியவில்லை.

என்னுடைய இந்த நிலை மேலதிகாரிக்கு வித்தியாசமாகத் தோன்றியிருக்க வேண்டும். என்ன ஆயிற்று என்று கேட்டார்.

சட்டென்று சுதாரித்துக்கொண்டேன். "ஒன்றுமில்லை. இன்றைக்கு எனக்கு விடுமுறை வேண்டும்."

"தாராளமாக எடுத்துக்கொள். பிரச்னை ஒன்றும் இல்லையே?" பதற்றத்துடன் கேட்டார்.

வெறுமையுடன் புன்முறுவல் செய்தபடி, "நோ ... நோ... யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். அதுதான் உடனே கிளம்பி வரச் சொல்லி ஃபோன் செய்திருக்கிறாள் மனைவி."

நான் விடைபெற்று வெளியில் வந்தேன். ஆபீஸ் சாவிகளை சீனியரிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்க்கூட்டரைக் கிளப்பினேன்.

வரும்போது இருந்ததைவிட வெயில் இப்பொழுது உக்கிரமாக இருந்தது.

சாந்தாவின் மகன் என்னைத் தேடிக்கொண்டு வருவதாவது? இது வரை நான் பார்ததும் இராதவன், இன்று என்னுடைய

வீட்டைத் தேடிக்கொண்டு வந்தால் என்றால்?

புரியாத புதிர்தான்!

அதுதான் போகட்டும். அவன் வந்தால் கமலா இவ்வளவு பதற்றப்படுவானேன்? அவன் என்னைப் பார்த்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் அலுவலகத்தின் முகவரியைக் கொடுத்து நேராய் அங்கே அனுப்பியிருக்கலாமே?

வீடு போய் சேரும் போது அரைமணி கடந்துவிட்டது.

கமலாவின் சொற்கள் இதற்கு முன் என்னைக் காயப்படுத்தியது உண்டு. எங்கள் வீட்டின் முன் அறை சுவரில் என் உறவினரின் புகைப்படங்கள் மாட்டியிருக்கின்றன. அதில் நானும் சாந்தாவும் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவும் இருந்தது. திருமணத்தின் போது மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட ஃபோட்டோ. அதைப் பார்க்கும் போதெல்லாம் கமலா முணுமுணுப்பது உண்மைதான்

என்றாலும் அது அங்கே இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றியது.

அதோடு நான் வேண்டுமென்று அவள் போனபிறகு அந்தப் படத்தை மாட்டவில்லை. அவள் இருந்தபோதே மாட்டியதுதான்.

"அவள் இங்கு என் மனைவியாகச் சில நாட்கள் இருந்தாள் என்பது உண்மை என்னும்போது அந்த ஃபோட்டோ அங்கே இருப்பதில் தவறு என்ன?"

ஒரு நாள் இப்படி நான் கேட்டபோது .... "தவறு என்று சொல்லவில்லை. தேவையா என்று கேட்கிறேன். பார்ப்பவர்களுக்கு...."

அவள் சொல்ல வந்ததை முடிக்க விடவில்லை. "உன்னை இரண்டாவது மனைவி என்று நினைத்துக் கொள்வார்களே என்றா?" நான் கொஞ்சம் நக்கலாகவே கேட்டேன்.

முகம் கறுக்க, கமலா உள்ளே போக முற்பட்டாள்.

"இதோ பார் கமலா! உன் மனசுக்குக் கஷ்டமாக இருந்தால் சொல்லு. எடுத்துவிடுகிறேன்." சீரியஸாகச் சொன்னேன்.

எனக்கு கோபம் வந்துவிட்டதை உணர்ந்துகொண்டாளோ! உள்ளே போகப் போனவள் நின்றவாறு, "எடுப்பானேன்? அங்கேயே இருக்கட்டும். நாள் முழுவதும் ஃபோட்டோவைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருங்கள். யாருடனோ ஓடிப்போனவள் இன்றும் உங்களுக்கு விருப்பமானவளாக இருந்தால், அந்த ஃபோட்டோவை எடுத்து விடுவதால் மட்டும் நீங்கள் அவளை மறந்து விடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை." படு தீவிரமான குரலில் சொல்லிவிட்டு, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது போல் புடவைத் தலைப்பை ஒருமுறை உதறினாள்.

அவள் பேச்சிலிருந்த வேதனையைக் கண்டு எனக்குச் சிரிப்பு வந்தது. அது வேதனை கூட இல்லை, பொறாமை.

கமலாவுக்கு அவள் மீது கோபம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தன் கணவன் சில நாள் வேறு ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை நடத்தியிருக்கிறான் என்பதை எந்த மனைவியும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டாள்.

நான் அந்த ஃபோட்டோவை சுவரிலிருந்து எடுக்கவில்லை. திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் என்னுடன் குடித்தனம் செய்து என்னை மகிழ்ச்சியில் மூழ்கடித்தவள் திடீரென்று ஒரு நாள் .....

'ஏனோ எனக்கு இந்த வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் போல் தோன்றுகிறது. நான் போகிறேன். உங்களுக்கு வேதனையைத் தருவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எந்த விதத்திலாவது உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் இப்படிப் போவதற்கு நீங்கள் எந்த விதமாகவும் காரணம் இல்லை.'

என்று எழுதி வைத்துவிட்டு சாந்தா போய் விட்டாள்.

அதன் பிறகு சிலநாள் கழித்துத் தெரிந்தது, எங்கள் தெருவிலேயே எப்போதும் தலையைக் குனிந்துகொண்டு நடமாடும் கலைஞன் ஒருவனையும் காணவில்லை என்று.

அவனுடைய கலை அவளை ஈர்த்திருக்கலாம். அவன் அவளை எந்த அளவுக்கு வசியம் செய்துவிட்டானோ தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு இந்த இருபது வருடங்களில் அந்த இருவரும் என் கண்ணில் படவே இல்லை.

இதோ .... நான் கமலாவை மறுமணம் செய்துகொண்டு பதினைந்து வருடங்கள் கழித்து இன்று சாந்தாவின் மகன் என்று சொல்லிக்கொண்டு ஒரு வாலிபன் எங்கள் வீட்டுக்கு வரும் வரையில்.

ஸ்கூட்டரை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு, எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டே ஸ்டாண்டைப் போட்டேன்.

கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். சாந்தாவும் உடன் வந்திருப்பாளோ? அப்படி வந்திருந்தால் கமலா அந்த விஷயத்தை ஃபோனில் கட்டாயம் சொல்லியிருப்பாள்.

கிராதி கேட் திறந்துதான் இருந்தது. உள்ளே காலடி எடுத்துவைத்தேன்.

ஹாலில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று, "வணக்கம் சார்" என்றான்.

நான் தலையை உயர்த்தி அவன் பக்கம் பார்த்தேன். அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்தேன். இருவரின் பார்வையும் சந்தித்துக்கொண்டதும் சிலையாக நின்றுவிட்டேன்.

அவனும் என்னைப் பார்த்த வியப்படைந்தவனாய் அப்படியே நின்று விட்டான்.

சரியாய் இருபது வயதில் நான் எப்படி இருந்தேனோ, இப்போது அவன் அப்படியே இருந்தான்.

அவனைப் பார்க்கப் பார்க்க எனக்குக் குழப்பமாக இருந்தது. சாந்தாவுக்கு என் மூலமாக ஓரு மகன் கூட இருக்கிறானா?

இந்த உண்மையை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தொண்டை காய்ந்து, நாக்கு வரண்டுவிட்டது போல் இருந்தது. வேகமாக உள்ளே சென்று ஃபிரிஜ்ஜைத் திறந்து ஜில்லென்று தண்ணீரை பாட்டிலை உயர்த்தி அப்படியே குடித்தேன்.

"உங்களுக்கு மனைவி இருந்ததாகச் சொன்னீங்களே தவிர அவளுக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொல்லவில்லையே?" பின்னாலேயே வந்து நின்ற கமலா நிஷ்டூரமாகச் சொன்னாள்.

முகம் வெளிறக் கமலாவைப் பார்த்தேன்."இந்த விஷயம் எனக்கும் தெரியாது."

"உங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் பிள்ளை உங்கள் மூலமாக அவளுக்குப் பிறந்தானாமா?" கமலாவின் குரல் ஏளனமாக ஒலித்தது.

என்ன பேசுவதென்று எனக்குப் புரியவில்லை. திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நள்ளிரவு வேளையில் என்னை விட்டுப் பிரிந்து போகும்போது, அப்பொழுதே கருவை அவள் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தாளா? சாந்தா ஒரு நாளும் தன் சந்தோஷங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை.

என்ன பேசுவதென்று புரியாமல் மறுபடியும் ஹாலுக்கு வந்து அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சங்கடமான உணர்வு என் உள்ளே பரவியிருந்தது.
அவனும் சங்டமாக உணர்வதுபோல் எனக்குத் தோன்றியது.

"அம்மா உங்களிடம் இந்தக் கடிதத்தைத் தரச் சொன்னாள்." தலையைக் குனிந்துகொண்டே சொன்னான்.

"என்ன விஷயம்? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?" கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முன்பே எரிச்சலுடன் கேட்டேன்.

"எனக்குத் தெரியாது."

"அவளும் இந்த ஊருக்கு வந்திருக்கிறாளா?"

அவன் சட்டென்று தலையை உயர்தினான். எண்ணங்கள் திடீரென்று அறுந்து போனாற்போல் திடுக்கிட்டு என் பக்கம் பார்த்தான்.

"இல்லை."

"எந்த ஊரில் இருக்கீங்க?"

"காஞ்சீபுரம்."

'உங்க அப்பா என்ன செய்கிறார்?'என்று கேட்க வாயைத் திறக்கப் போனவன் கடைசி நிமிடத்தில் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அவனால் என்ன பதில் சொல்ல முடியும்? தவறு செய்தது அவன் இல்லை என்னும் போது அவன் மனசை நோக அடிப்பது சரி இல்லை. எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டேன். நிலைமையைச் சரி செய்ய முயன்றேன். "கமலா! சாப்பிட ஏதாவது கொண்டு வா!" உள் பக்கம் திரும்பி குரல் கொடுத்தேன்.

"இதோ .. அந்த வேலையாகத்தான் இருக்கிறேன்."

உள்ளிருந்து வந்த குரல் அவனுக்கு எப்படிக் கேட்டதோ .... எனக்குக் கர்ணகடூரமாக ஒலித்தது.

"இப்போ எதுவும் வேண்டாங்க." அவசரமாகச் சொன்னான்.

அவன் சொன்னனைதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே "சொல்லு. எதற்காக உன் அம்மா உன்னை என்னிடம் அனுப்பி வைத்தாள்?" என்றேன்.

"தெரியாது. ஒரு மாதத்திற்கு முன், இறந்து போவதற்கு முதல்நாள் இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து, ஒரு தடவை உங்களைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாள். உங்களுடைய முகவரியையும் கொடுத்தாள்."

திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி, அவனைப் பார்த்தேன். "உன்னுடைய அம்மா இறந்துவிட்டாளா?"

ஹாலுக்குத் தான் வந்து விட்டதை உணர்த்துவது போல் கமலா லேசாக இருமினாள்.

சட்டென்று அந்தப் பக்கம் பார்த்தேன். டிபன் தட்டைக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் தரையில் வைத்தாள்.

கழுத்தை லேசாகத் திருப்பிப் பார்த்தேன். காலையில் குழந்தைகளுக்காகவும், எனக்கு மதிய உணவுக்காகவும் செய்த உப்புமா அது. மீதம் இருந்ததை ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்திருக்கிறாள்.

ஆறிப்போன உப்புமா...... தட்டை அவனது கையில் கொடுக்காமல் கீழே வைத்தது என் மனதில் சுருக்கென்று தைத்தது.

"எடுத்துக்கொள்" என்றேன்.

"காலையில் டிபன் சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினேன்."

அவன் ரொம்பவும் தயங்குவது வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரு நிமிடம் கழித்து என்ன நினைத்துக்கொண்டானோ, தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.

சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் காலையிலிருந்து அவன் எதுவுமே சாப்பிட்டிருக்க மாட்டான் போல் தோன்றியது.

இரண்டு நிமிடங்கள் கழித்துக் கமலா டம்ளரில் குடிக்கத் தண்ணீரும், கோப்பையில் காபியும் கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்தாள். என்னிடமும் காபி கோப்பையைக் கொடுத்தாள்.

அவன் உப்புமா சாப்பிட்ட பிறகு தட்டை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்தான். அவன் தண்ணீர் குடிக்கும் வரையில் காத்திருந்தேன்.

"அம்மாவுக்கு என்ன உடம்பு?" இரக்கம் கலந்த குரலில் கேட்டேன்.

"என்ன உடம்பு என்று சரியாகத் தெரியவில்லை. சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு பணவசதி இல்லாததால் எந்த டெஸ்டும் செய்துகொள்ளவில்லை."

அவன் விழிகளில் ஈரம் பளபளத்தது பொல் இருந்தது.

"ஏன்? குடும்ப வருமானம் போதுமானதாக இல்லையா?" தட்டித் தடுமாறிக்கொண்டே கேட்டேன்.

"வீட்டில் நான், அம்மா,என் தங்கை ... மூவர் மட்டும்தான். எங்களுடைய சாப்பாட்டுக்குத் தேவையானதை அம்மா தையல் தொழில் மூலம் சம்பாதித்து வந்தாள்." தலையைக் குனிந்துகொண்டே சொன்னான். நடுநடுவில் ஆழமாக மூச்சு விட்டுக்கொண்டான்.

அந்த நிமிடம் அவன் சொன்னதைக் கேட்ட பிறகு அவர்கள் வீட்டின் நிலைமை காட்சியாக மாறி என் கண் முன்னால் விரிந்தது. அவள் மீது எனக்குக் கோபமோ, வெறுப்போ எழவில்லை, இரக்கத்தைத் தவிர. எப்படி இருந்தவள் எப்படி ஆகிவிட்டாள்?

"எங்கே அந்தக் கடிதம்?"

வெள்ளைக் கவர். மேலே யாருடைய பெயரோ முகவரியோ இருக்கவில்லை. கவரைப் பிரித்துக் கடிதத்தை வெளியில் எடுத்தேன்.

'வணக்கம். எனது வாழ்க்கையில் வண்ண வண்ண பூக்களை மலரவைத்த உங்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்துவிட்டு, ஒரு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய சில மாதங்களுக்குள் நான் காலடி எடுத்து வைத்தது நரகத்தில் என்று புரிந்துவிட்டது.

பரந்த மனதுடன் பெரிய பையனுக்கு கைகொடுத்து உதவுவீர்கள் என்றால் அந்த நிழலிலே அவன் தங்கைக்கும் இரணடு வேளை உணவு கிடைக்கும் என்ற ஆதங்கத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முடிவு உங்கள் கையில்.....'

அவளுடைய வேதனை புரிந்தபோது என் விழிகளில் நீர் திரண்டது. இரண்டு வருடங்கள் .... இரண்டு வருடங்கள்தான் அவள் என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டாள், சலசலவென்று பாயும் நதியைப் போல் சந்தோஷமாக ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும்.....

அந்த இளைஞன் எழுந்துகொண்டான்.

"ஏன் எழுந்துவிட்டாய்? இருக்கலாமே?"

"பதினோரு மணி ஆகிவிட்டது. தங்கை அங்கே தனியே இருப்பாள். காஞ்சீபுரம் போக வேண்டும்."

"வீடு போய்ச் சேரும்போது நான்கு மணி ஆகிவிடும். ஒருவாய் சாப்பிட்டுப் போகலாம். இரு" என்றேன்.

"இப்பொழுது தானே உப்புமா சாப்பிட்டேன். பசியே இல்லை."

அவன் இருக்கமாட்டான் என்று புரிந்துவிட்டதால் நானும் எழுந்து கொண்டேன்.

"போகிறேன்."

விழிகளில் லேசாய் கண்ணீர் கசிய முணுமுணுப்பது போல் சொன்னேன். "போய் வருகிறேன் என்று சொல்லு."

அவன் புன்முறுவல் செய்தான். அறை முகப்பில் நின்றிருந்த கமலாவைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பினான். "கிளம்புகிறேன் அம்மா" என்றான்.

எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கமலா வெறுமே தலையை அசைத்தாள். என் மனதில் சுருக்கென்று தைத்தது. அவள் இரு என்று ஒரு வார்த்தை அவனிடம் சொல்லியிருந்தால் என் மனம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும்?

அவன் பின்னாலேயே வாசல் கேட் வரையில் சென்றேன். கேட்டைத் திறந்துகொண்டு வெளியில் காலடி வைக்கும்போது நினைவுக்கு வந்தது. "ஆமாம்.. உன் பெயர்?"

"சந்திரசேகர்."

திடுக்கிட்டேன். என் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் பரவியது. அது என்னுடைய பெயர்தான்.

"எது வரையில் படித்திருக்கிறாய்?"

"பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்கிறேன்."

அவன் விடை பெற்றுக்கொள்வது போல் தலையை அசைத்தான்.

"இரு. ஸ்கூட்டரில் பஸ் ஸ்டாண்ட் வரையில் கொண்டுவிடுகிறேன்."

"வேண்டாங்க."

தலையை குறுக்காக அசைத்தான். அதைவிட என் இதயத்தின் மீது கத்தியால் குத்தியிருந்தால் கூட வலித்திருக்காது.

"பணம் ஏதாவது வேண்டுமா?"

"எதற்கு?"

தடுமாறுவது என் பங்காயிற்று. "அவசரத்திற்கு உதவுமே என்றுதான்."

"என்னிடம் தேவையான அளவு இருக்குங்க."

ஈரமான விழிகளுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"எங்கேயாவது வெலை கிடைக்குமா என்று பார்க்கிறேன். முடிந்தபோது வந்து பொய்க் கொண்டிரு. ஏதும் பணம் தேவைபட்டால் கடிதம் எழுது."

அவள் எழுதிய கடிதத்திற்கு பதில் தருவது போல் மையமாகச் சொன்னேன்.

அவன் வேகமாக அடிகளை வைத்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான். நான் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ!

நீளமான அந்தத் தெருவைத் தாண்டி முனையில் திரும்பும் வரை அந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"அவன் போய் விட்டான். இனிமேல் நீங்க உள்ளே வரலாம்."

பின்னாலிருந்து கமலாவின் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னாலேயே கேட்டின் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

"நீங்கள் அவனுக்கு வேலை வாங்கித் தரப் போவதாக முடிவு செய்திருக்கீங்களா?" கத்தியை விடக் கூர்மை அதிகமாக இருந்தது கமலாவின் கேள்வியில்.

"அதிலே எந்தத் தவறும் இல்லையே?"

கமலா மோவாய்க் கட்டையை தோள்பட்டையில் இடித்துக்கொண்டாள். "எந்தத் தவறும் இல்லைதான். ஆனால் அவன் இங்கேதான் தங்குவான் என்று சொன்னால் வடித்துக்கொட்ட என்னால் முடியாது. ஏற்கனவே எனக்கு ரத்த அழுத்தம் ஜாஸ்தி. இரண்டு குழந்தைகளுடன் வீட்டு வேலைகளைச் செய்வதற்குள் தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்." கோபமாகச் சொன்னாள்.

"உனக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பார்த்துக்கொள்கிறேன் போதுமா?"

உதட்டைச் சுழித்துப் பழித்தாள். "இப்பொழுது அப்படித்தான் சொல்வீங்க. சுமையை தலையில் ஏற்றிக்கொண்ட பிறகு மாட்டேன்

என்று சொல்லத்தான் முடியுமா? முதலில் நான்கு நாட்கள் தான் என்று சொல்வீங்க. அது நான்கு மாதங்கள் ஆகுமோ இல்லை நான்கு வருடங்கள் ஆகுமோ யார் கண்டார்கள்? அதிலும் உங்களுக்குக் கிடைக்கிற சம்பளம்தான் எவ்வளவு? பணம் தேவைப்பட்டால் எழுது என்று சொன்னீங்களே? எங்கிருந்து அனுப்புவதாக உத்தேசம்? கடன் வாங்கியா?"

கமலா என்னை விடப்போவதில்லை என்று புரிந்தது. அவனிடம் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கேட்காமல் அவள் என்னை விடமாட்டாள்.

"அது என்னுடைய பிரச்னை. அந்தக் கவலை உனக்கு எதற்கு?"

கமலா என்னை சுட்டெரிப்பது பொல் பார்த்தாள்.

எங்கே எப்படி வளரவேண்டிய பையன் அவன் ..... குழந்தையாக என் மார்பிலும், தோளிலும், என்னுடைய பாதுகாப்பில்,

அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகி இந்நேரத்திற்குப் படிப்பில் எங்கேயோ பொயிருக்க வேண்டியவன்....

ஆனால் கமலாவின் பார்வையில் அவன் யாரோ வேற்று மனிதன்.

"இது போல் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்வது, போக்குவரத்து வைத்துக்கொள்வது .... இதெல்லாம் எதில் கொண்டுபோய் விடுமோ, நான்றாக யோசித்துக் கொள்ளுங்கள். நமக்கு இருக்கும் சொத்து எல்லாம் உங்க அப்பா சாகும் போது வைத்துவிட்டு போன காரை பெயர்ந்து விழும் இந்த வீடு மட்டும்தான்."

எரிச்சல் மேலிட அவள் பக்கம் பார்த்தேன். உள்ளிருந்து கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. "சட்டப்படி யாருக்கு எது கிடைக்க வேண்டுமொ அது கிடைக்கும். நீ என்னதான் முயற்சி செய்தாலும் அதைத் தடுக்க முடியாது." சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையைவிட்டு வெளியில் வந்து விட்டேன்.

கலங்கிப் பொன மனதுடன் ஹால் சோபாவில் கண்களை மூடிப் படுத்திருந்த எனக்கு உள்ளிருந்து கமலாவின் அழுகை ரொம்ப நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்தது.

மூன்று நாட்கள் கழித்துத் தபாலில் காஞ்சீபுரத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

சுந்திரசேகரன் அவர்களுக்கு,
வணக்கம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அப்பா என்று என்னால் அழைக்கப்பட்ட கயவன் என்னுடைய தந்தை இல்லை என்ற உண்மை எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இன்று வேறு ஒரு நபரை என்னுடைய தந்தையாக அறிமுகப்படுத்தி நாலு பேருக்கு நடுவில் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவது நியாயம் இல்லை என்று தோன்றுகிறது.

உங்களுடைய மனைவி என்னுடைய வருகையால் பதற்றம் அடைந்து உடனே •போன் செய்து உங்களை வரவழைத்த காரணத்தையும், இறக்கும் தருணத்தில் அம்மா என்னை உங்களிடம் ஏன் போகச் சொன்னாள் என்பதையும் உங்கள் வீட்டு முன் அறையில் உட்கார்ந்திருந்த போதே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அம்மா தான் செய்த தவறைச் சரி செய்து கொள்ள நினைத்து என்னிடம் அப்படிச் சொல்லியிருப்பாள். என்னுடைய வருகையால் உங்கள் மன அமைதி கெடாவிட்டாலும், உங்கள் மனைவியின் மனம் எவ்வளவு பாதிக்கப்படுமோ, அந்த கடைசி நெரத்தில் அவளால் ஊகிக்க முடியாமல் போயிருக்கக் கூடும்.

சுயநலம் தான் மனிதனை எத்தனை தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது!

நான் உங்களிடம் எதையாவது கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை, அம்மா இருபது வருடங்களுக்கு முன், அவள் வயிற்றில் நான் கருவாக இருக்கும் போதே தொலைத்துவிட்டாள்.

அது மட்டுமே இல்லை. அப்பா என்று அழைக்கச் சொல்லி எந்த நபரை எனக்கு அறிமுகப்படுத்தினாளோ, அந்த ஆள் என்னைப் பார்த்ததும் எரிச்சல் அடைந்து என்னை வெறுத்து ஒதுக்கிய காரணத்தை இப்போது என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தோற்றத்தில் மகன் தந்தையைக் கொள்வது சில சமயம் எவ்வளவு பெரிய பிரளயத்தை உண்டாக்குமோ என்னுடைய வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு.

நான் இந்த உலகத்திற்கு வருவதற்குக் காரணம் நீங்கள்தான் என்றாலும் அப்பா என்று உங்களை அழைக்கும் உரிமை எனக்கு இல்லை.

வாழ்க்கையில் மற்றொரு முறை உங்களைச் சந்தித்து மற்றும் ஒரு தவறை நான் செய்ய மாட்டேன்.

என்னுடைய உருவத்தை இதயத்திலிருந்து அழிக்க உங்களால் முடியாது. என் பெயரைக் கூட மறந்து போகாத விதமாக, அறுந்து போகாத, கண்ணுக்குத் தெரியாத கயிற்றுடன் அம்மா நம் இருவரையும் பிணைத்துவிட்டாள். மறந்து போக வேண்டும் என்று நினைத்தாலும் மறக்க முடியாத நிலைமை.

கடைசியாக ஒரு வார்த்தை. இருபது வருடங்களுக்கு முன் சிதிலமாகிப் போன உங்கள் இல்வாழ்க்கையின் சுவடு புகைப்படத்தின் உருவத்தில் இன்னும் உங்கள் வீட்டுச் சுவரில் இருக்கத்தான் வேண்டுமா? யோசியுங்கள்.

இப்படிக்கு,
சந்திரசேகர் என்று அழைக்கப்படும் நான்.