ஒரு சனிக்கிழமை இரவு

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Publisher: 
ambalam.com
Story: 

முன்னால் கடல்... பின்னால் கடல். சுற்றிலும் கடல்.

எல்லா இடங்களிலும் நிலத்தை மூடிவிட்டது போல் தண்ணீர்.

காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. சுற்றிலும் அழுத்தமான இருள். தொலைவிலிருந்து யாரோ அழும் குரல். எங்கேயோ ஏதோ இடிந்துவிட்டது போல் ஓசை.

குப்பன் தன்னுடைய ஐந்து வயது மகளை பாதுகாப்பாக அரவணைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மகனின் தோளில் கையை வைத்து அருகில் இழுத்துக்கொண்டான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்தன. தண்ணீரின் மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்தது. குடிசையின் இடது பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. குப்பன் சட்டென்று எழுந்து மகளையும், மகனையும் இருகைகளிலும் தூக்கிக்கொண்டு "வாடி.. வெளியே. சட்டுன்னு ஓடி வா" என்று கத்திக்கொண்டே ஓரே எட்டில் வெளியில் ஓடி வந்தான்.

வெளியில் வந்து பார்த்தவன் அப்படியே கற்சிலையாக நின்று விட்டான்.

எங்கும் ஜலமயம்.

"சீக்கிரமா வந்து தொலையேன்." குரலை உயர்த்திக் கத்தினான். காற்றின் வேகத்தில் அவன் குரல் தேய்ந்து போனது. குடிசை ஒருபக்கமாகச் சாய்ந்தது.

பதட்டம்... பயம் ... துக்கம் பொங்கியது.

இருபக்கமும் குழந்தைகள் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தார்கள். "அம்மா... அம்மா" என்று அழுதுகொண்டு இருந்தார்கள். இடுப்புவரையிருந்த தண்ணீரின் மட்டம் தோள் அளவிற்கு உயர்ந்தது.

மகாலெச்சுமியை இழுத்துக்கொண்டு குடிசை வெள்ளத்தில் போய்க்கொண்டு இருந்தது. கொடுத்துவைத்த மகராசி. பின்னால் நடந்த கொடுமையைப் பார்க்க அவள் இருக்கவில்லை.

அழுவதற்குத் தெம்பு இல்லை. அழுதால் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.

அலைக்குப் பின்னால் அலை. வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரும் மரங்கள். மரக்கட்டைகளாகிவிட்ட பிணங்கள்.

காற்றின் வேகம் குறையவில்லை.

காலுக்கடியில் புதர்கள், தோள்களில் தான் பெற்ற குழந்தைகள். பின்னாலிருந்து வந்த அலை பலமாகத் தாக்கியது. வாய்க்குள் புகுந்த நீரின் சுவை கரிப்பாக இருந்தது.

"பெரியவனே ..."

"அய்யா ..."

"பலமாகப் பிடிச்சுக்கோ .." காற்றின் வேகத்தில் அவன் குரல் பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட கேட்கவில்லை.

மகன் தந்தையின் தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான். சின்னவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டாள். தாயின் நினைப்பு வரவில்லை. பயம்... பயம்... பளீரென்று மின்னல் மின்னியபோது தண்ணீரில் விழுந்த மரங்கள் விகாரமாகத் தென்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வெளிச்சமும் இல்லையென்றால் அந்த இருள் நேரத்தில் ஓரு அடித்தொலைவில் இருப்பதுகூட கண்களுக்குத் தெரியாது.

கற்கள் குத்தி கால்கள் ரணமாகிவிட்டன. மரக்கட்டைகள், செடிகொடிகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்க்கொண்டு இருந்தன. உடலில் துணி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. உயிருக்கே உத்திரவாதம் இல்லாதபோது உடைகளைப்பற்றி கவலைப்படுவானேன்? உடல் முழுவதும் கீறல்கள்.

பாரம் தாங்க முடியாமல் தோள்களில் வலியெடுத்தது. பெரியவன் உட்கார்ந்து இருந்த பக்கம் வலி அதிகமாக இருந்தது.

மாடுகள், பாம்புகள், மனிதர்கள்.. எல்லாமே பிணங்கள்தான். உயிரோடு இருந்தவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தார்கள். வீடுவாசல் எல்லாவற்றையும் துறந்து திசைதெரியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் போய்க்கொண்டு இருந்தார்கள். பந்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலை அது.

குப்பன் காலை உதறினான். காலைச்சுற்றிக் கொண்டிருந்த பாம்பு பிடி நழுவி வெள்ளத்தோடு போனது. தொலைவிலிருந்து "ஹோ" வென்று கடலலைகளின் சத்தம் கேட்டது.

குப்பனுக்குக் குழப்பமாக இருந்தது. அலையின் வேகத்திற்கு நிலை தடுமாறி கீழே விழப்போனவன் சமாளித்துக் கொண்டான். வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுந்து இருமல் வந்தது. இறந்துபோன மாட்டின் கொம்பு விலாவில் குத்தியது.

இன்னும் எத்தனை தூரம் போகவேண்டுமோ தெரியவில்லை. எந்தப்பக்கம் போகவேண்டுமோ புரியவில்லை. நடக்க நடக்கத் தூரம் அதிகரித்துக் கொண்டு வருவது போன்ற உணர்வு.

"பெரியவனே...."

"அய்யா...."

"ஒரு நிமிடம் இறங்கு, தோள் வலி ஜாஸ்தியாக இருக்கு."

அவன் பேசவில்லை. இன்னும் இறுக்கமாகத் தந்தையை பிடித்துக் கொண்டான். கல் ஒன்று தடுக்கியதில் கால் சுளுக்கிக்கொண்டது.

ஆற்றாமை... தன் மீதே ஏற்பட்ட கோபம்... ஏதோ செய்யவேண்டும் என்ற ஆத்திரம்... எதுவும் செய்ய முடியாத இயலாமை. காயங்களின் மீது உப்புத் தண்ணீர் பட்டுக் கொண்டு இருப்பதால் ஏற்பட்ட எரிச்சல். காற்றின் இரைச்சலில் காதுகள் இயங்க மறுத்தன. யோசிக்கும் திறமை நசித்து விட்டது போன்ற உணர்வு. ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாததால் ஏற்பட்ட துக்கம்.

"அடேய்.... ஒரு நிமிடம் கீழே இறங்கு."

காற்றின் வேகத்தில் அவன் சொன்னது மகன் காதுகளில் விழுந்ததோ இல்லையோ தெரியாது. பின்னாலிருந்து ஆளுயரத்திற்கு வேகமாய் வந்த அலை அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள முயன்றது.

தோளில் இருந்த பாரத்தை ஒரு நிமிடம் உதறித் தள்ள முடிந்தால்? ஒரு நிமிடம்.... ஒரே ஒரு நிமிடம்.

வந்த அலை அவனை அடித்துச் செல்ல அந்த ஒரு நிமிடம் போதும்.

"வருத்தப்படாதே குப்பா, கஷ்டங்கள் வரும்போதுதான் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
"நான் அழுவது அதற்காக இல்லை சாமீ.... என் நெஞ்சு எப்பவோ பாஷாணமாகி விட்டது. தாலி கட்டியவள் குடிசையுடன் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனபோதே இதயம் கல்லாகி விட்டது. அதுதான் பாரம் தாங்க முடியாமல் தோள்கள் வலித்தபோது பெரியவனை உதறித் தள்ள முடிந்தது. அதற்குப் பிறகும்..... இனிமேல் அடி எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் பாரம் தாங்க முடியாமல் மகளின் முதுகில் கையை வைத்தபோது..." மேற்கொண்டு பேச முடியாமல் அவன் குரல் கம்மியது.

"அந்த சின்னப் பெண்ணுக்குக் கூடப் புரிந்து விட்டது சாமீ.... கழுத்தைக் கட்டிக்கொண்டு 'அய்யா.... அண்ணனை விட நான் பாரமாக இருக்கமாட்டேன் இல்லையா'' என்று அப்பாவியாகக் கேட்டாள் சாமீ. சுற்றிலும் படர்ந்த இருள். உயிர் மீது இருக்கும் ஆசை.... எல்லாமே சேர்ந்து என் மனதைக் கொன்றுவிட்டது சாமீ... அவளையும் விட்டு விட்டு... நான் மட்டும்... நான்.. மட்டும்..."

முகத்தை இரு கைகளாலேயும் மூடிக்கொண்டு குப்பன் அழுது கொண்டிருந்தான்.

(முற்றும்)
» add new comment
தெலுங்கிலிருந்து தமிழுக்கு...

Submitted by Anonymous on Wed, 2007-01-10 11:04.
மொழிபெயர்ப்புத் துறையில் பலரது மரியாதையைப் பெற்ற சரஸ்வதி ராம்நாத் அத்துறையில் முத்திரை பதித்து மறைந்துவிட்டார். இன்று மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடும் தமிழ் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. சௌரி, குறிஞ்சி வேலன், பாவண்ணன், சீதாலட்சுமி விஸ்வநாத் போன்ற ஒரு சிலர், ஒரு காலத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ, ரா.வீழிநாதன், அ.கி.ஜெயராமன் போன்றோர் வளர்த்த தமிழாக்க விருட்சத்தின் விழுதுகளாய் இயங்குகிறார்கள். அவ்வகையில் ஆர்வத்தோடு தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளராக இயங்குபவர் என்று திருமதி கௌரி கிருபானந்தனைச் சொல்ல வேண்டும்.

தாய்மொழி தமிழ். ஆனால் தந்தை ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்தவர். எனவே பள்ளி கல்லூரிப் படிப்பெல்லாம் தெலுங்கில்தான். திருமணத்திற்குப் பிறகு தமிழ் படித்து விறுவிறுவென்று தமிழில் பெரிய தேர்ச்சி பெற்றுவிட்டார். தமிழின் தற்கால இலக்கியத்தில் முக்குளித்தவர்.

முதன் முதலில் தெலுங்கிலிருந்து தமிழில் இவர் மொழி பெயர்த்த சிறுகதை எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'பந்தயம்'.

பந்தயத்தில் வெற்றி பெற்று, தமிழாக்கத் துறையில் சாதனை படைக்கலானார். 'அந்தர் முகம்' என்ற தெலுங்கு நாவலை இவர் மொழிபெயர்க்க அல்லயன்ஸ் நூலாக வெளியிட்டது. பிறகென்ன! 10 நாவல்கள் 4 சுய முன்னோற்ற நூல்கள் என தமிழாக்கத் துறைக்கு இவரது எழுத்து வளம் கூட்டியது. இப்போதுகூட தெலுங்கிலிருந்து தமிழில் இவர் மொழி பெயர்த்த இரண்டு நாவல்கள் அச்சில் உள்ளது. (அம்பலம் வார இதழில் இவர் மொழி பெயர்த்த எண்டமூரி வீரேந்திரநாத்தின் 'ஒரு சனிக்கிழமை இரவு' என்ற சிறுகதை ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது.) எண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ் பெற்ற 'துளசிதளம்', 'மீண்டும் துளசி' ஆகிய விறுவிறுப்பான மர்ம நாவல்களை மொழிபெயர்த்தவரும் இவரே.

சொந்தமாகவும் இரண்டே இரண்டு தெலுங்குச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தெலுங்கில் இவரது அபிமான எழுத்தாளர்கள் எண்டமூரி வீரேந்திரநாத், காமேஸ்வரி, சுலோசனா ராணி. தமிழில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா.

தொடர்கிறது கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புப் பணி.