நீயாவது அப்படிச் சொல்லாதே

Publisher: 
(web)
Story: 

பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே நெய்யில் முந்திரிபருப்பு வறுபடும் வாசனை ஊரைக் கூட்டியது. புத்தகப்பையை ஒரு பக்கம் வீசிவிட்டு சமையல் அறைக்குள் ஓடினேன்.

"டேய் சுவாமி .. வாசல்ல பூக்காரி வந்தால் கூப்பிடு. அக்காவை பெண் பார்க்க வராங்க. நீயும் முகம் கழுவி பளிச்சுன்னு நெற்றியில் வீபூதியை இட்டுக்கொள்." அம்மா அடுப்பிலிருந்து கேசரியை இறக்கி வைத்துக்கொண்டே சொன்னாள்.

பெரிய அக்கா சாந்தியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாலையில் வரப்போகிறார்கள். சாந்தி அக்கா மாநிறமாக இருந்தாலும் களையாக இருப்பாள். இது வரையில் பத்து பேராவது பார்த்துவிட்டுப் போயிருப்பார்கள். சிலருக்கு பெண்ணைப் பிடித்திருந்தாலும் அவர்கள் கேட்கும் வரதட்சிணை, சீர் வரிசைகளை செய்யும் அளவுக்கு அப்பாவுக்கு வசதியில்லை.

அரசுப் பள்ளியில் வாத்தியாராக இருக்கும் அப்பாவுக்கு நான்கு குழந்தைகள், மனைவி மற்றும் நோயாளித் தாய். இத்தனை பேருக்கு மூன்று வேளை சாப்பாடு போடுவதே பிரம்ம பிரயத்தினமாக இருந்தது. இரண்டாவது அக்கா மல்லிகா பத்தாவதுடன் படிப்பை நிறுத்தி விட்டு ஜவுளிக்கடையில் சேல்ஸ் கர்ளாக வேலை பார்த்துகொண்டிருந்தாள். அடுத்தவள் மாலதி எட்டாவது வகுப்பு.

வீட்டில் கடைக்குட்டி நான் தான். மகன் வயிற்றுப் பேரன் என்பதால் பாட்டிச் செல்லம். வீட்டில் தேங்காய் உடைத்தால் இளநீரை தனியாக எடுத்து வைத்து எனக்கு மட்டும் தருவாள். தான் உயிரோடு இருக்கும் போதே பேத்தியின் கல்யாணத்தைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பது பாட்டியின் ஆசை.

சொன்னது போலவே மாப்பிள்ளை வீட்டார் மாலையில் வந்தார்கள். டிபன் காப்பி சாப்பிட்ட பிறகு பெண்ணை அழைத்து வரச்சொன்னார்கள். சாந்தி அக்கா குனிந்த தலை நிமிராமல் வந்து எல்லோருக்கும் பொதுவாக வணங்கினாள். சம்பிரதாயமான கேள்வி பதில்கள் முடிந்தன.

ஊருக்குப் போய் பதில் எழுதுவதாக சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும் நேரம், இரண்டாவது அக்கா மல்லிகா வேலையிலிருந்து வீடு திரும்பினாள்.

அடுத்த வாரமே மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கடிதம் வந்தது. பாட்டி சொன்னது போல் அப்பா கடிதத்தை சுவாமி படத்தின் முன்னால் வைத்து விட்டு பிறகு பிரித்தார். எல்லோரும் அப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்பாவின் முகம் களை இழந்ததை கவனித்த பாட்டி "என்ன பதில்தான் எழுதியிருக்காங்க?" என்று கேட்டாள்.

"பெரிய மகளுக்குப் பதிலாக இரண்டாவது மகளைக் கட்டிக் கொடுப்பதாக இருந்தால் சம்மதமாம்." அப்பா சொன்னார்.

சட்டென்று சாந்தி அக்காவைப் பார்த்தேன். விழிகளிலிருந்து வெளியேறப் போன கண்ணீரை, கண்களில் தூசி விழுந்தாற் போன்ற பாவனையுடன் புடவைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டு உள்ளே போய்விட்டாள். சின்ன அக்காவின் இதழ்களில் மலர்ந்த முறுவல் என் பார்வையிலிருந்து தப்பவில்லை.

"இதில் யோசிக்க என்ன இருக்கு? ஒருத்திக்கு முடிந்தாலும் பாரம் குறையும்தானே." பாட்டி முடிவைச் சொல்லிவிட்டாள்.

அன்று வெள்ளிக்கிழமை. ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் கூடி வரும் என்று பாட்டி சொன்னதால் சாந்தி அக்கா கையில் அர்ச்சனை கூடையுடன் கிளம்பினாள். துணைக்கு நானும் சென்றேன்.

அர்ச்சனையை முடித்துக் கொண்டு குளத்து படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோ ம். அக்கா ரொம்ப நேரம் வரையில் பேசவேயில்லை. வரும் வழியில் திடீரென்று கேட்டாள். "சுவாமீ ..உன்கிட்டே ஒண்ணு கேட்பேன். செய்வாயா?"

என்ன என்பது போல் பார்த்தேன்.

"நீயாவது பெண் பார்க்கப்போன இடத்தில் தங்கையைப் பிடித்திருப்பதாக சொல்லிவிடாதே."

(முற்றும்)