Skip navigation.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு...

தெலுங்கிலிருந்து தமிழுக்கு...
(ambalam.com)

…மொழிபெயர்ப்புத் துறையில் பலரது மரியாதையைப் பெற்ற சரஸ்வதி ராம்நாத் அத்துறையில் முத்திரை பதித்து மறைந்துவிட்டார். இன்று மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடும் தமிழ் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. சௌரி, குறிஞ்சி வேலன், பாவண்ணன், சீதாலட்சுமி விஸ்வநாத் போன்ற ஒரு சிலர், ஒரு காலத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ, ரா.வீழிநாதன், அ.கி.ஜெயராமன் போன்றோர் வளர்த்த தமிழாக்க விருட்சத்தின் விழுதுகளாய் இயங்குகிறார்கள். அவ்வகையில் ஆர்வத்தோடு தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளராக இயங்குபவர் என்று திருமதி கௌரி கிருபானந்தனைச் சொல்ல வேண்டும்.

தாய்மொழி தமிழ். ஆனால் தந்தை ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்தவர். எனவே பள்ளி கல்லூரிப் படிப்பெல்லாம் தெலுங்கில்தான். திருமணத்திற்குப் பிறகு தமிழ் படித்து விறுவிறுவென்று தமிழில் பெரிய தேர்ச்சி பெற்றுவிட்டார். தமிழின் தற்கால இலக்கியத்தில் முக்குளித்தவர்.

முதன் முதலில் தெலுங்கிலிருந்து தமிழில் இவர் மொழி பெயர்த்த சிறுகதை எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ‘பந்தயம்’.

பந்தயத்தில் வெற்றி பெற்று, தமிழாக்கத் துறையில் சாதனை படைக்கலானார். ‘அந்தர் முகம்’ என்ற தெலுங்கு நாவலை இவர் மொழிபெயர்க்க அல்லயன்ஸ் நூலாக வெளியிட்டது. பிறகென்ன! 10 நாவல்கள் 4 சுய முன்னோற்ற நூல்கள் என தமிழாக்கத் துறைக்கு இவரது எழுத்து வளம் கூட்டியது. இப்போதுகூட தெலுங்கிலிருந்து தமிழில் இவர் மொழி பெயர்த்த இரண்டு நாவல்கள் அச்சில் உள்ளது. (அம்பலம் வார இதழில் இவர் மொழி பெயர்த்த எண்டமூரி வீரேந்திரநாத்தின் ‘ஒரு சனிக்கிழமை இரவு’ என்ற சிறுகதை ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது.) எண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ் பெற்ற ‘துளசிதளம்’, ‘மீண்டும் துளசி’ ஆகிய விறுவிறுப்பான மர்ம நாவல்களை மொழிபெயர்த்தவரும் இவரே.

சொந்தமாகவும் இரண்டு தெலுங்குச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தெலுங்கில் இவரது அபிமான எழுத்தாளர்கள் எண்டமூரி வீரேந்திரநாத், காமேஸ்வரி, சுலோசனா ராணி. தமிழில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா.

தொடர்கிறது கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புப் பணி.